இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவர் அரசமைப்பு கவுன்ஸிலின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜிநாமாச் செய்கின்றவரைக்கும் தற்காலிக ஏற்பாடாக தமிழரசுக் கட்சியின் மற்றைய முன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரும் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுபவருமான சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றக் குழுத்தலைவருக்கான கடமைகளைப் பொறுப்பெடுப்பார் என்று தமிழரசுக் கட்சியின்
தலைவர் சி.வி.கே.சிவஞானமும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்திருக்கின்றனர்.
அவர்கள் இருவரின் ஒப்பத்துடனும் இது தொடர்பான கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்குப் பிரதியிட்டு சபாநாயகருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிறீதரன் உட்பட எட்டு எம்.பிக்களுக்கும் கட்சி செயலாளரால் இன்று காலை உத்தியோபூர்வமாக அறிவிக்கப்பட்டதாக அறியவந்தது.
இது தொடர்பாக கட்சியின் எம்.பிக்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கட்சிச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றவை வருமாறு:-
‘வணக்கம்!
எமது அரசியல் குழுவின் முடிவின்படி அரசமைப்புப் பேரவையிலிருந்து இராஜிநாமாச் செய்யும்படி கௌரவ சிறீதரன் அவர்களுக்கு பணிப்புரை வழங்கியிருந்தபோதும் அவர் அதனைச் செய்யாதிருந்த
காரணத்தினால், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் தொடரமுடியாது என்று கடந்த ஜனவரி 24ஆம் திகதி நடந்த அரசியல் குழுக் கூட்டத்தில்
அவருக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்குப் பிறகும் ஒரு வார கால அவகாசம் தலைவரின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டது.
தொடர்ந்தும் அவர் கட்சியின் பணிப்புரையை மீறுகின்றபடியால் தலைவரும் நானும், அரசியல் குழுவின் முடிவின் பிரகாரம், கௌரவ சிறீதரன் இலங்கைத்தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்
குழுத் தலைவர் பதவியில் தொடர மாட்டார் என்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம்.
அவர் அரசமைப்புப் பேரவையிலிருந்து இராஜிநாமாச் செய்கின்ற வரைக்கும் தற்காலிக ஏற்பாடாக எமது கட்சியின் மற்றைய முன் வரிசை உறுப்பினரும் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுபவருமான கௌரவ சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் நாடாளுமன்றக் குழுத் தலைவருக்கான கடமைகளைப் பொறுப்பெடுப்பார்.
தலைவரின் அறிவுறுத்தலின்படி இதனை அறிவிக்கின்றேன்.’ என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Leave a comment