தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் எமது பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிக்கக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
‘திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து, அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக நாங்கள் கிளர்ந்தெழுவோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசமிருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுள்ளது.
எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களை பரப்பக்கூடாது. இலங்கை பௌத்த நாடென்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் புரிந்துகொள்ள வேண்டும். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திஸ்ஸ விகாரையில் பௌத்த மக்களுக்குரிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. அதற்கு எதிராக கஜேந்திரகுமாரின் ஆட்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், இவர்கள் கொழும்பில் சுதந்திரமாக கோவிலுக்குச் செல்லும் நிலை காணப்படுகின்றது.
இலங்கை பௌத்த நாடென்பதால்தான் இது சாத்தியப்படுகின்றது. இலங்கையில் வேறொரு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால், அந்த மதத்துக்கு எதிராக செயல்பட்டுவிட்டு சுதந்திரமாக இருக்க முடியுமா? பௌத்த தர்மம் ஊடாக வழங்கப்பட்ட போதனைகளால்தான் பொறுமை காக்கின்றோம்.
ஆனால், அந்த பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை, தமிழர் தாயகத்தில் விகாரை கட்ட முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிடுகின்றது.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன? வடக்கு- கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமைகளை நாசமாக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது’- என்றார்.
Leave a comment