மோட்டார் குண்டை பிரித்து அதிலிருந்த வெடிமருந்தை எடுக்க முயன்றபோது, அது வெடித்ததில் இருவர் படுகாயமடைந்தனர்.
கிளிநொச்சி – ஆனையிறவு – தட்டுவன்கொட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கச்சாயை சேர்ந்த சிங்கராசா அனுராஜ் (வயது 26), கேதீஸ் (வயது 50) ஆகியோரே படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,
படுகாயமடைந்தவர்களில் ஒருவரான அனுராஜ் தனது தாயாரின் வீட்டுக்கு படுகாயமடைந்த மற்றையவரையும் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் அந்தப் பகுதியில் வெடிக்காத குண்டுகளை எடுத்து அவற்றிலிருந்து வெடிமருந்து சேகரித்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் நேற்றைய தினம் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்றை எடுத்து அதனைப் பிரித்து, அதிலிருந்த வெடி மருந்தை எடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது, அந்தக் குண்டு வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்தனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவருக்கு இரு கால்களும் கடுமையாக சிதைந்தமையால் சத்திர சிகிச்சை மூலம் அவை வெட்டி அகற்றப்பட்டன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment