வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் – நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு மாவீரர் ஒருவரின் தாய் பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தூக்குக் காவடி ஒன்று நினைவிடத்துக்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்திப் பவனிகள் வந்திருந்தன.
இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களின் பின்னர் 26ஆம் திகதி அவர் சாவைத் தழுவிக்கொண்டார்.
























Leave a comment