“தற்போதைய அரசை ஆட்சிப்பீடமேற்றுவதற்கு அரச ஊழியர்கள் பெரும் பங்காற்றியிருந்தாலும், இன்று மின்சார சபை ஊழியர்கள் வீதியில் விடப்பட்டுள்ளனர். தபால் வாக்குகளில் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தந்த அரச ஊழியர் இன்று தமது தொழிலையைப் பாதுகாக்க வீதியில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் எனக் கூறிய அரசு தற்போது அவர்களை மிக மோசமாக நடத்தி வருகின்றது. மின்சார சபையில் 23 ஆயிரம் ஊழியர்களினது தொழில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. அரசு இவர்களை கைவிட்டு விட்டது. மின்சார சபையின் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள் தற்போது உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர்களாக மாறிப் போதாக்குறைக்கு இந்த ஊழியர்களை அச்சுறுத்தியும் வருகின்றனர்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
“மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, நவீனமயமாக்கலுக்கு உள்ளாகுவதாக இருந்தால் நல்லது. ஆனால் ஊழியர்களின் தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு புதிய பயணத்தை ஆரம்பிக்கும் போது, மாற்றங்களைச் செய்யும் போது, இந்தத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களை வீதிக்கு இறக்குவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கிராமத்துக்குக் கிராமம், நகரத்துக்கு நகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் கீழ், அனுராதபுரம், ரம்பேவ கிராமத்தில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சனிக்கிழமை நேரில் சென்று ஆராய்ந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசுகள் பலாத்காரத்தைப் பிரயோகிக்ககூடாது. மக்கள் நேயமாக நடந்துகொள்ள வேண்டும். மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆதரவற்றவர்களுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் ஆதரவாக நிற்க வேண்டும். பக்க பலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். பாதுகாப்புணவர்வைக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து மக்களைத் தூரமாக்க இடமளிக்கக் கூடாது.
தெளிவான அதிகாரத்தைக் கொண்ட அரசு அமைந்திருக்கும் நேரத்தில், மக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது தீர்க்கவோ அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் ஏன் கிராமங்களுக்கு வருகின்றார் என்று மக்கள் தயவோடு கேட்கின்றனர். ஆட்சியில் இருக்கும் அரசு மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில்களை வழங்காமையால்தான் எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவையை இவ்வாறு முன்னெடுத்து வருகின்றார்.
அரசு என்ன செய்தாலும், எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை என்பது பேச்சுக்களைப் போலவே செயல்கள் மூலம் சேவைகளைப் பெற்றுத் தரும் நடைமுறை ரீதியான செயற்றிட்டமாகும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், எனது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றவும் முடிந்தவரை போராடுவேன்.
மட்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருவோர் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வறட்சியான காலங்களில் அதிக களிமண்ணை பெற்றுக் கொள்ள முடியாமை, தேவையான விறகுகளைப் பெற வனப் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் தேவைப்படும் தலையீடுகள், இயந்திரங்களில் காணப்படும் சிக்கல்கள், மழைக்காலத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியுமான உபகரணங்களைப் பெறுதல், களிமண் மெருகூட்டல் இயந்திரத்தின் தேவை மற்றும் தமது உற்பத்தி வடிவமைப்புகளை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்த பொது கட்டடமொன்றை நிர்மாணித்தல், மின்சார அடுப்பைப் பெறுதல், களிமண் மெருகூட்டல் இயந்திரத்திற்கு சூரிய சக்தி வசதிகளைப் பெறுதல் மற்றும் சந்தை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட எட்டு வகையான பிரச்சினைகளை மட்பாண்டத் தொழிலுடன் தொடர்புடையோர் எதிர்நோக்கி வருகின்றனர். சூரிய சக்தி பிரச்சினை மற்றும் சந்தை வாய்ப்பு ஆகிய இரு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவேன்.” – என்றார்.
Leave a comment