“ஜனாதிபதி அநுரவின் அரசு 24 மணிநேரமும் பொய்களைப் பரப்புகின்றது. பொய்களையே கொள்கையாகக் கொண்டிருக்கின்றது.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரச தரப்பினர் பொய்களாலும், குழப்பங்களாலும் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள். இவ்வாறான ஏமாற்றுக் செயற்பாடுகளால் தம்மைத் தக்கவைத்துள்ளனர்.
24 மணிநேரமும் இவ்வாறு பொய் பேசும் அரசு இலங்கையில் இதுவரை இருந்ததில்லை. பொய்கள் மட்டும்தான் அரசின் பிரதான கொள்கையாக மாறியுள்ளன.
அண்மைக்காலமாக போதைப்பொருள்கள் பெருமளவில் கைப்பற்றப்படுகின்றன. இது தொடர்பில் அரசால் பல்வேறு பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. போதைப்பொருள் காரணமாக நாடும் சீரழிந்து வருகிறது.
எனவே, அவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது சிறந்த செயலாகும்.
அதேநேரம், துறைமுகத்தில் இருந்து அனுமதியில்லாமல் கொள்கலன்களை விடுவித்த விவகாரம் தொடர்பில் அரசு மௌனமாக உள்ளது.
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மாகாண சபைத் தேர்தலில் பொய், மோசடி, குழப்பம், ஏமாற்றுதல் ஆகியவற்றைத் தோற்கடிக்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.” – என்றார்.
Leave a comment