சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இன உணர்வாளர்களும் இணைந்து இனஅழிப்பு செய்யப்பட்டவர்களுக்கான சுடரினை ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
முன்னதாக, முள்ளிவாய்க்காலில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணினை இளையவர்கள் சுமந்து செல்ல முன்னே மண்ணுக்கு உரிய மரியாதை பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் பிரதான சுடரேற்றும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்தாக ஹரிணி அன்ரன் அவர்களின் அறிவித்தலுடன் அகவணக்கம் இடம்பெற்று, மண்ணுக்காக உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கான மரியாதை செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
அடுத்து Land Acknowledgement யாதவன் குணசிங்கம் அவர்களால் வாசிக்கப்பட்டது. அங்கு வருகை தந்த மக்களை முள்ளிவாய்க்கால் நினைவினை ஊட்டும் முகமாக தர்சனா யோகராஜா அவர்களின் நெறியாள்கையிலும் தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் வெளிவந்த ‘ஓலம் கேட்டதே’ என்ற முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடலுக்கான நடனம் இடம்பெற்றது. கற்பனா நாகேந்திரா அவர்களின் அறிமுக உரையுடன் பிரதான சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதான சுடரினை பிரிட்டிஸ்கொலம்பியா மாகாணத்தில் வசிக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து வந்தவர்களில் மூன்று பிள்ளைகளையும் கணவரையும் இழந்த திருமதி சாந்தி, Member of Parliament Klassen, Member of Parliament Dhaliwal ஆகியோர் ஏற்றினர்.
பாராளுமன்ற உறுப்பினர் உரைகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாத சூழலில் பிரிட்டிஸ்கொலம்பியா முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் Gregor Robertston தங்கள் தமிழினஅழிப்பு செய்திகளை சாதனா ராஜேஸ்வரன், துசாந்தன் சிவரூபன் ஆகியோரால் வாசிக்கப்பட்டது.
அடுத்து ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசுவின் வரிகளில் உருவான முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடலுக்கு கற்பனா நாகேந்திரா, பைந்தவி அன்ரனி ஆகியோரின் நடனம் இடம்பெற்றது.
அடுத்து முள்ளிவாய்க்காலில் 2 வயது சிறுமியாக இருந்த அபி(பிறையரசி) குமார் அவர்களின் சிறார்களுக்கான நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலினை அங்கு வருகை தந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியிட்டு வைக்க முறையே வித்தகன் பிரதிக்குமார், ரித்விக் பிரதீபன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர் நூலாசிரியர் உரையில் ‘தான் ஏன் தாதியராக விரும்புகிறேன், என்றும் முள்ளிவாய்க்கால் கதைகளை இளையவர்களுக்கு எவ்வாறு கொண்டு செல்லமுடியும்’ என்பதை தெளிவுபடுத்தியது மட்டுமல் லாமல் அவரால் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மே முதல் வாரத்தில் சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலமாக அறிவிக்கப்பட்ட பகுதியினை 3D வடிவத்தில் உருவாக்கி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனையவர்களுக்கும் விளங்கப்படுத்தினார்.
அடுத்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கவிதையினை விதுர்சிகா பிரதிக்குமாரால் வாசிக்கப்பட்டதுடன் நிறைவு பெற்றது.








Leave a comment