ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவும் அப்பாவும் மகனும் போன்று என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அப்பாவும் (ரணில்) மகனும் (சஜித்) ஒன்றிணையும் சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை வெளியில் இருந்து நாம் செய்து வருகின்றோம்.” – என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஓர் இல்லம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகும்.
நான் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் அவருடன் இருந்தேன்.
ஐக்கிய தேசியக் கட்சி உடைந்த போதும் நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்தேன் என்பது அவருக்குத் தெரியும்.”
“எதிரணிகள் ஒன்றிணைவதற்கு முற்படும்போது கள்வர்கள் ஒன்றிணைகின்றனர் என ஆளுந்தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இங்கு களவு, மோசடிகளுக்கு இடமில்லை. எனவே, அனைவரும் கள்வர்கள் எனக் கூறுவதை ஆளுங்கட்சி நிறுத்த வேண்டும்.
கள்வர்களைப் பிடிக்க வேண்டும், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
இது தொடர்பான நடவடிக்கைகள் சட்ட பூர்வமாகவே இடம்பெற வேண்டும். கள்வர்கள் யாரென்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.” – என்றார்.
Leave a comment