யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி, கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்து வந்த நிலையில் கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாகத் தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.
அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்தப் பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே, கற்ககோவளம் – புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறான பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்தப் பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கோரியுள்ளனர்
அதனை அடுத்து, அவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களை வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், இரவு மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இந்தத் தாக்குதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



Leave a comment