யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமையவுள்ள காணிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் நீதிமன்ற அனுமதியுடன் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் நிலத்தில் புதையுண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் துப்பாக்கி ரவைகளை அகழ்ந்து எடுக்க அனுமதி கோரி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தனர்.
அதன் அடிப்படையில் துப்பாக்கி ரவைகளை அகழ்ந்து எடுக்கும் பணிகளை இன்று முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து துப்பாக்கி ரவைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


Leave a comment