வெளிநாடு செல்லவிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஆனந்தராசன் சஜீவனுக்கு நீதி கோரி நேற்று மல்லாவியில் போராட்டம் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறியும் பொலிஸார் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மல்லாவியை சேர்ந்த மக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கம் என்பன இணைந்து இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்தன.
மல்லாவி பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமான பேரணி மல்லாவி பொலிஸ் நிலையம் வரை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்கள், ‘சஜீவன் மரணத்துக்கு நீதி வேண்டும்’, ‘கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து’, ‘விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா’, ‘எமது நண்பனின் மரணத்துக்கு நீதி வேண்டும்’, ‘வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா’, ‘எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்’ என்று கோஷம் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்றைய தினம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இதேநேரம், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் விரைவான விசாரணையை முன்னெடுக்காதுவிடின் தாம் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என்று கூறியதுடன், இதன்போது வன்னிமாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் து. ரவிகரனால் மனு ஒன்றும் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
படுகொலையான ஆ.சஜீவன் கனடா செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி பெருந்தொகை பணத்துடன் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், மறுநாள் வவுனிக்குளம் பகுதியிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment