தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட் பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் நேற்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நல்லூர் இளங்கலைஞர் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம் சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோச னைகளை தயாரிப்பது என்று யாழ்ப்பாணத்தில் நேற்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஒற்றையாட்சி அரசமைப்பு நிராகரிப்பு தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள, 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு முறையை அடியோடு நிராகரிப்பதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத்தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வே எட்டப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
புதிய அரசியல் குழு உருவாக்கம் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
‘இன்றைய (நேற்றைய) கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தரப்புகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ‘பொதுச்சபை’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து ஒரு விசேட ‘அரசியல் குழு’ அமைக்கப்படும். இக்குழுவானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக்கூடிய அரசமைப்பு யோசனைகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும்.
முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் பெறப்படும். மேலதிகமாக ஏனைய தரப்புகளிடம் உள்ள சிறந்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டு, ஒரு பொதுவான வரைவு தயாரிக்கப்படும்.
இந்த வரைவு மீண்டும் பொதுச் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மக்கள் மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும்.’ – என்றார்.
அனைவருக்கும் அழைப்பு நேற்றைய நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருந்து எவரும் கலந்து கொண்டனர் எனத் தெரியவில்லை.
எனினும், இதில் பங்கேற்காத அரசியல் கட்சிகள் மற்றும் புத்திஜீவிகள் எதிர் காலத்தில் இணைய விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்றும், அனைவரையும் அரவணைத்துத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
Leave a comment