வடக்கில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் கொழும்பில் இன்று ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என்பதைப் பிரதானமாக வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில் “வடக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை இலங்கை அரச படைகளிடம் இருந்து விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
இதன்போது, “மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?, எமது மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாட அரச படைகள் இலாபம் ஈட்டுவது முறையா?, பூர்வீகக் காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment