கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி வழங்கப்படும் எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடற்றொழிலாளர்கள், நீண்டகாலமாகப் பல சிரமங்களுக்கும் சமூக ரீதியான ஓரங்கட்டல்களுக்கும் உள்ளாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
காணாமற்போன, விபத்துக்குள்ளான அல்லது வெளிநாடுகளில் சிறைப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நிலையை மாற்றும் நோக்குடன், ஜனாதிபதி நிதியம் ஊடாக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
சாதாரண தர மாணவர்களுக்கு மாதம் 3,000ரூபாயும், உயர்தர மாணவர்களுக்கு மாதம் 5,000 ரூபாயும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் 8,000 ரூபாயும் வழங்கப்படும் எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Leave a comment