விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு செயன்முறையை அடுத்து இலங்கையின் பொருளாதார செயலாக்கம் முன்னேற்றமடைந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நாணய மற்றும் நிதிச்சந்தைகள் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜேஸன் வு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள உலகளாவிய நிதியியல் ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கையை வொஷிங்டனில் வெளியிட்டுவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கையின் செயற்பாடுகள் குறித்துத் திருப்தியடைவதாகவும், இருப்பினும் இந்த சாதகமான சூழ்நிலையானது ‘முழுநிறைவு’ எனும் எண்ணப்பாட்டுக்கு வழிவகுத்துவிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை இலங்கை போன்ற எல்லை நாடுகளின் பொருளாதாரத்தைப் பொறுத்தமட்டில், அவை தமது நடைமுறைக்கணக்கு மற்றும் நிதிக்காப்பு ஆகிய அடிப்படைகளை தொடர்ச்சியாக வலுப்படுத்தவேண்டும் என்றும், அதனூடாகவே வெளியக அழுத்தங்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறைவடையும் என்றும் ஜேஸன் வு சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment