அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரச அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் மாவட்ட செயலக ஏ.ஐ.விக்ரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.ஆதம்பாவா, அஷ்ரப் தாஹிர், எம்.எஸ்.அப்துல் வாசித், முத்து ரத்தத்த, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம உள்ளிட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இங்கு அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய வேலைத்திட்டங்களான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், கிராமிய வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்ட செயலகம் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் வேறு ஸ்தாபனங்கள் ஊடாகச் செயற்படுத்தப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி, வீதி அபிவிருத்தி, திண்மக்கழிவகற்றல், குடிநீர் திட்டம், விளையாட்டு போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் இந்த விடயங்களில் அதீக அக்கறையுடன் பணியாற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
அத்தோடு, தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராய இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை அவ்வாறான கூட்டங்களில் எடுக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டனர்.
கொழும்பு – அம்பாறை இடையில் உள்ளக வான் போக்குவரத்துச் சேவை ஒன்றை ஆரம்பித்தல், நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்குக் கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், கல்முனை பிரதேசத்தில் ரயில் டிக்கெட் வசதிகளை நிறுவுதல், மாவட்டத்தின் பல்வேறுபட்ட இடங்களில் யானை வேலிகளை விரைவாக அமைத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.





Leave a comment