திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டது முதல் அவர் நேற்றிரவு வரை உணவு, தண்ணீர் அருந்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பல இடங்களில் தனது சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திருகோணமலை கடற்கரைக்கு அருகில் உள்ள சம்புத்த
ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு மாத்திரம் தனது சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டியே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரையோரமாக அவர் சட்டவிரோத கட்டுமானங்களை அமைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த கட்டுமானத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. இதன் மூலம் குழப்ப நிலை உருவானது. இதைத் தொடர்ந்து, குழப்பநிலைமையை உருவாக்கியமைக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் 11 பேருக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பௌத்த பிக்குகளும், 5 பொதுமக்களுமாக 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
ஏனைய இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment