அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்து, வழக்குத்தொடர்வதற்கு, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம் 2024 இல் பதவிக்கு வந்த போது, நீதி வழங்குவதாக உறுதியளித்த போதிலும், இதுவரையில் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களும், உயிர் பிழைத்தவர்களும் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மோதல் தொடர்பான பாலியல் வன்முறையை, இலங்கை நிவர்த்தி செய்யத்தவறியது, பொறுப்புக்கூறல் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு உள்நாட்டுயுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இரு தரப்பினரும் ஏராளமான போர்க்குற்றங்களைச் செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள், விசாரணைகளை முடக்கி, நீதியை மறுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளதாகவும், அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment