திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4 பிக்குகள் உட்பட 9 பேரை
எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலேயே நேற்று புதன்கிழமை இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
கடந்த நவம்பர் மாதம் கரையோர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை மீறி கடற்கரையில் கட்டுமானத்தை அமைத்தமை மற்றும் சிலையை வைத்தமை தொடர்பில் வனவாசி பலங்கொட கசியப்ப தேரர், திருகோணமலை கோட்டை விகாராதிபதி கல்ஞான வன்சதிஸ்ஸ தேரர், சுகித்த வன்ச தேரர், சிறிமாபுர விகாரையைச் சேர்ந்த நந்த தேரர் ஆகிய தேரர்களும் கோட்டை விகாரையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தீபானி லியனகே, விதுரங்க லொக்கு கலப்பதி, எல்.ரீ.பெரேரா, பியலால் பிறேமசிறி, தெக்கும் துலார குணதிலக ஆகியோருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுதிப்ப லியனகே, சுகத் பிரசன்ன ஆகிய மேலும் இருவர் எதிரிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
அவர்கள் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில், இவர்கள் இருவர் தொடர்பில் எதிர்வரும் 19ஆம் திகதி தீர்மானம் மேற்கொள்ளப்படும்
என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி ஒருவரும், பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
கரையோர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றத்துக்கு இல்லை.
மேல் நீதிமன்றத்துக்கு மட்டுமே பிணை வழங்கும் அதிகாரம் உள்ளது. இதனால் நேற்றைய தினம் எதிராளிகளை பிணையில் விடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட
போதும் பிணை வழங்கப்படவில்லை.
சர்ச்சைக்குரிய இடத்தில் மேசை ஒன்றின்மீது புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதைச்ற்றி நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் மீது அஸ்பெஸ்டேட் சீற் போடப்பட்டு ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கொட்டகையே கரையோரப் பாதுகாப்புக் கட்டளை கட்டத்தை மீறி அமைக்கப்பட்டதாக நேற்றைய வழக்கில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
மேசையில் வைக்கப்பட்ட சிலை அல்லது அந்தக் கொட்டகையை அகற்றுவது தொடர்பான ஏற்பாட்டுக்கு இணங்காத நிலையிலேயே எதிராளிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கொட்டகையை உடனடியாக அகற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a comment