Home தாயகச் செய்திகள் இலங்கைத் தமிழர் விவகாரம்; தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கைத் தமிழர் விவகாரம்; தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

Share
Share

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசமைப்பு சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்றைய தினம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு, ‘ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் உணர்வுபூர்வமான பிணைப்புகளால் இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும் – எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் முதல்வர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த்தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்
அடிப்படையில் இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பான பிரச்னை குறித்து பிரதமர் மோடியின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருவது எனது கடமை.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை நான் பெற்றுள்ளேன்.

இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு – வன்முறை – அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர். பலர், இதனை தங்கள் சமூகத்துக்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம்
ஆண்டுகளின் அரசமைப்புகள்) அனைத்தும் ஓர் ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன. இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின்அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள் தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள், தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருகிறது.

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம் இனப்பிரச்னைகளைத் தீர்க்கும் போர்வையில், புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்திவருகிறது.

இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஓர் ஒற்றையாட்சி ‘எக்கியராஜ்ய’ (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது. இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம்
அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப்
பேச்சுகளின்போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்) – வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது (தமிழர் தாயகம்), தமிழ் தேசத்துக்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை)

மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும் பாகுபாடின்மையையும் உறுதி செய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல் போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன.

இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும் எந்தவொரு புதிய அரசமைப்பும் அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும்.

இது மீண்டும் மோதல்களுக்கும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவுகளாகக் கருதுகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இரு தரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டுக்கும்
பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

வடக்கில் 80 ஆயிரம் வெடிபொருட்கள் அகற்றப்பட்டன!

வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஈடுபட்டு வரும் ஸார்ப் நிறுவனம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி...