வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தீர்மானத்துக்கமைய தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை முன்பாக சட்டவிரோத கட்டடம் என்று அறிவித்தல் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதேச சபை செயலாளருக்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளு கைக்குட்பட்ட தையிட்டி பகுதியில் தனியார் காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை சட்டவிரோத கட்டடம் என அடையாளப்படுத்தும் வகையில் அறிவித்தல் பலகையை மூன்று மொழிகளிலும் நாட்ட பிரதேச சபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இது தொடர்பிலேயே பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், தையிட்டி விகாரைக்கு முன்பாக சட்டவிரோத கட்டடம் என்று அறிவித்தல் பலகை நடப்படப் போவதாக புலனாய்வுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு அறிவித்தல் பலகையை காட்சிப்படுத்துவதன் மூலம் பௌத்தம் மற்றும் இந்து சமயத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தில் முரண்நிலை தோன்றுவதுடன் சமாதான சீர்குலைவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறான அறிவித்தல் பலகையை வலி. வடக்கு பிரதேச சபையோ, வேறு அமைப்புகள் மூலமோ, நிறுவனங்கள் மூலமோ காட்சிப்படுத்தும் நோக்கம் இருப்பின் அதை சட்டரீதியாக மேற்கொள்ளுமாறும் சட்ட ரீதியற்ற முறையில் அவ்வாறு அறிவித்தல் பலகையை நாட்ட நடவடிக்கை எடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கிறோம் – என்றுள்ளது.
இந்த விடயத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வில் தவிசாளர் சோ. சுகிர்தன் வெளிப்படுத்தினார்.
இதன்படி, தனியார் காணிக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் என்ற வகையில் எமது பிரதேசசபையின் சட்ட ஆலோசகரின் ஆலோசனைப்படி அறிவித்தல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பில் தென்னிலங்கையில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரிக்க வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானிக்கப்பட்டது.
தையிட்டி விகாரை காணி வரைபடங்களை தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை வெளியிட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. தையிட்டி விகாரையை உடைக்கப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தவறான தகவல்களை சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் சபை அமர்வில்
குற்றம்சாட்டப்பட்டது.
Leave a comment