மாகாண சபைகள் தேர்தலை விரைந்து நடத்துமாறு அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இந்திய வெளிவிவகார
அமைச்சர் சு. ஜெய்சங்கரிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர்.
நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை கொழும்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டாக சந்தித்தன.
சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்திருந்தது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம். பி., தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி., புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல். எவ்.வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
பங்கேற்றவர்கள் அனைவரும் மாகாண சபைகள் தேர்தலை இனியும் இழுத்தடிக்காமல் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று கோரினர்.
இதன்போது, மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அரசின் நிலைப்பாடு – கருத்து வெளிப்பாடுகள் – நாட்டில் உள்ள நிலைமை குறித்து தமிழ் தலைவர்களின் கருத்துகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
‘தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு ஒற்றையாட்சியின் கீழ் சாத்தியமில்லை. மாகாண சபைகள் முறைமை இனப்பிரச்னைக்கான தீர்வு இல்லை. ஆயினும், இன்றைய நிலையில் மாகாண சபைகள் தேர்தல் இழுத்தடிக்காமல் நடைபெற வேண்டும்’ என்று கஜேந்திரகுமார்
எம். பி. சுட்டிக்காட்டினார்.
‘எங்களின் நிலைப்பாடும் இதுவே. சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கட்டாயமானது. ஆனால், அதனை கட்டமைப்பில் எதிர்பார்க்கிறோமே தவிர, சமஷ்டி என்ற பெயரை வலியுறுத்தவில்லை’, என்று சுமந்திரன் கூறினார்.
இந்த சந்திப்பில் பேரிடர் பாதிப்புகள் – மீட்பு நடவடிக்கைகள் – நிவாரணங்கள் எனப் பல விடயங்கள் தொடர்பிலும் தமிழ் தலைவர்களிடம் வெளிவிவகார அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன், பேரிடர் பாதிப்புக்கு இந்தியா அளித்து வரும் உதவி – ஒத்துழைப்புகளுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நன்றியும் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment