திருநெல்வேலியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சிறைக்குள் திட்டம் தீட்டப்பட்டு தெல்லிப்பழையில் ஒத்திகை பார்க்கப்பட்டு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் தலைமறைவாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டுவிட்டு உறவினரான இளைஞருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயதான நேசராஜா ஜெஜித் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீதியில் ஓடஓட வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் 6 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வன்னி பிரதேசத்தில் வாகனத்தில் சென்ற மூவரும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மூவருமே இவ்வாறு கைதாகினர். இவர்கள் மல்லாகம், தெல்லிப்பழை, கொக்குவிலை சேர்ந்த 20 – 25 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த விடயங்கள் வருமாறு,
கடந்த மாதம் கொக்குவில் சந்தைக்குள் இளைஞர் ஒருவரை சிலர் மிகமோசமாக தாக்கியிருந்தனர். அது தொடர்பான காணொலிகள் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் தன்னை சிறைக்கு அனுப்பிய வரை பழிவாங்குமாறு தெல்லிப்பழையில் கந்துவட்டி தொழிலில் ஈடுபடுபவருக்குக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரின் ஒழுங்கமைப்பில் நால்வர் குழு தயார் செய்யப்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக கொலையான இளைஞரின் நடவடிக்கைகளை வேவுபார்க்கப்பட்டு தகவல்கள் பரிமாறப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கொலை நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முதல்நாள் தெல்லிப்பழையில் வீடொன்றில் தாக்குதலுக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது. கொலை நடந்த அன்றைய தினம் திருநெல்வேலி சந்தைக்கு அருகிலும் அதற்கு முன்பாக சுமார் 500 மீற்றர் தொலைவிலும் தலா இருவர் வீதம் மோட்டார் சைக்கிள்களில் காத்திருந்துள்ளனர். பின்னர் இளைஞரை பின்தொடர்ந்து வந்து அவரை வெட்டினர். இதன்போது, தப்பி ஓடியவரை விரட்டிச் சென்று அவரின் காலை வெட்டித் துண்டாக்கினர்.
படுகாயங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் இளைஞர் உயிரிழந்தார். இதன்பின்னர், வாள்வெட்டை நடத்தியவர்கள் உரும்பிராயில் ஆடைகளை மாற்றிவிட்டு வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றனர். அவர்கள் வன்னியில் சென்று கொண்டிருந்தபோதே பொலிஸார் அவர்களை கைதுசெய்தனர்.
கைதானவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், வாள், தாக்குதல் நடத்தியபோது அணிந்திருந்த ஆடைகள் என்பவையும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை தொடர்ந்து விசாரித்து வரும் பொலிஸார் தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leave a comment