இந்திய அமைதிப் படையினரால் கொக்குவில் – பிரம்படியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
பிரம்படி வீதி ஆரம்பிக்கும் இடத்தில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இந்த நினைவேந்தல் நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
நினைவுத் தூபிக்கு பொதுச்சுடர் ஏற்றப் பட்டு, மலர் மாலை அணிவித்து மலர் தூவி இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவு கூரப்பட்டனர்.
இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், படுகொலையானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், படுகொலையான மக்களின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்திய அமைதிப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பவான் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது, 1987 ஒக்ரோபர் 11, 12ஆம் திகதிகளில் பிரம்படிக்குள் நுழைந்த இந்திய படையினர் அப்பாவி பொதுமக்களை உயிருடனும் சுட்டுக் கொன்றவர்களின் உடல்களையும் வீதியில் படுக்கவைத்து கவச வாகனங்களால் ஏற்றி நசித்துக் கொன்றனர்.
இவ்வாறு சுமார் 50 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் நிகழ்த்திய முதலாவது படுகொலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment