சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று இன்று (அக்டோபர் 7) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கடனை மறுசீரமைக்கும் செயல்பாட்டுக்கான ஆறாவது தவணைக் கடன் வழங்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மதிப்பாய்வின் மத்திய கட்டத்திற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பொருளாதார ரீதியாக வங்குரோத்தான நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்கான ஒரு மூலோபாய வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இதன்போது குறிப்பிட்டார்.
பொருளாதார மீட்சியை அடைய வேண்டுமானால், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய இலக்குகளைக் கூட கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும், அதற்காக முறையான வேலைத்திட்டம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார புத்துயிர்ப்பை அடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை மேலும் ஈர்க்க வேண்டும் என்றும், அதற்காக நாட்டில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் மேலும் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோரும், சர்வதேச நாணய நிதியம் சார்பில் அதன் தூதுக்குழுத் தலைவர் எவன் பாபஜோர்ஜியூ உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
Leave a comment