“இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேகநபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடும் இன்றி அவர்கள் கைது செய்யப்படுவார்கள். சிறை வாழ்க்கையில் இருந்து அவர்கள் தப்பவே முடியாது.” – இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“பொலிஸார் தமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். எனவே, அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. நீண்டகாலமாக இழக்கப்பட்ட நீதி தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
மக்களால் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கும் போது, அவற்றுக்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்க முற்படுகின்றனர். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை அவர்கள் அரசியல் பழிவாங்கல் எனச் சித்தரிக்கின்றனர்.
அண்மையில் இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேகநபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான அறிக்கைகளும் கிடைத்த வண்ணமுள்ளன. இவற்றுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்வாங்கப் போவதில்லை.
இவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் அச்சமடையவோ – பதற்றமடையவோ தேவையில்லை. மாறாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
Leave a comment