Home தாயகச் செய்திகள் ‘சைக்கிள்’ கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம் – இந்தியாவுக்குத் சிவிகே அறிவிப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘சைக்கிள்’ கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம் – இந்தியாவுக்குத் சிவிகே அறிவிப்பு!

Share
Share

“அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் இந்தியத் தரப்பினர் எங்களைப் பார்த்து ஒற்றுமையாக வாங்கோ, ஒற்றுமையாக வாங்கோ என்கின்றனர். அதுவும் இதற்குச் சைக்கிள் கட்சி வராது என்று தெரிந்து கொண்டும் நாங்கள் ஒற்றுமையில்லை என்று அவர்கள் கதைக்க முடியாது.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது.

ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அது என்னவென்றால் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான். அண்மையில் கூட இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றுதான் அவர்  சொல்லியிருக்கின்றார்.

உண்மையில் நாங்கள் ஒருமித்துதான் இருக்கின்றோம். உதாரணத்துக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்கள் என்று இந்தியா சொல்கின்றது?

ஆக நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதைவிடுத்து விசுவாமித்திரருக்கு வரம் கொடுத்தது போல் கேட்கத் தேவையில்லை.

நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ஆக அந்தச் சைக்கிள் கட்சியினர்தான் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் உடன்படாமல் இருக்கட்டும்.

உலகத்தில் எங்கும் எல்லோரும் முழு ஒற்றுமை என்று கிடையாதே. அவர்களை விட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் ஏனைய எல்லாக் கட்சிகளும் ஒருமித்துத்தான் இருக்கின்றன.

ஆனபடியால் இந்தியா எங்களுடைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு செயலாற்ற வேண்டும். நாங்கள் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கேட்கின்றோம். ஆனாலும் அது எங்களுடைய தீர்வல்ல என்று சொல்லியும் இருக்கின்றோம். இந்த 13 ஆவது திருத்தம் எங்களுக்கான தீர்வல்ல என்பதை இப்போதும் நாங்கள் சொல்லிக்கொள்கின்றோம்.

ஆனால், இப்போது இருக்கின்ற அதுவும் அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம்.

பிறகு ஏன் இந்தியத் தரப்பினர் எங்களைப் பார்த்து ஒற்றுமையாக வாங்கோ, ஒற்றுமையாக வாங்கோ என்கின்றனர். அதுவும் இதற்குச் சைக்கிள் கட்சி வராது என்று தெரிந்து கொண்டும் நாங்கள் ஒற்றுமையில்லை என்று அவர்கள் கதைக்க முடியாது.

நாங்கள் இந்தியாவைத்தான் கூடுதலாக நம்பியிருக்கின்றோம். ஆகவே இதை மாற்றம் செய்யக்கூடிய வலு, சக்தி இந்தியாவுக்குத்தான் இருக்கின்றது. நாங்கள் அதை நம்புகின்றோம். இந்தியா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்தியா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...

சர்வதேச விசாரணையை பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள்தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார்...

யாழில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் சொகுசு பஸ் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாசன் பிரேமதாஸ் எனும் மீன்...