Home ஒளிப்படங்கள் காற்றாலைக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்!
ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

காற்றாலைக்கு எதிராக மன்னாரில் திரண்ட மக்கள்!

Share
Share

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன.

அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

காற்றாலை திட்டம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டனப் பேரணி ஆரம்பமானது.

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று மன்னாருக்குச் சென்றிருந்தது.

மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து, சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இப்பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை அடைந்தது.

பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்றுகூடிய இடத்துக்குச் சென்றார்.

இதன்போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெறும் இடத்துக்குச் சென்றனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தாக்கிய நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டனர். பின்னர் தொடர்ச்சியாக முருகல் நிலை ஏற்பட்ட நிலையில் மத தலைவர்கள் அவ்விடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, பின், அவ்விடத்தில் இருந்து அனைவரையும் அகற்றினர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பஜார் பகுதியில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

இப்போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், ஆயிரக்கணக்கான மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...

மாகாண சபைத் தேர்தலை நடத்த நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர்!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

போதைப்பொருள் கடத்தல்; மன்னார் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை!

ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல்...