“காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசின் நிதி ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதித் தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. துறைமுகத்துக்கான எதிர்கால கேள்வி மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது காங்கேசன்துறை துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றியமைப்பது பொருளாதாரத்துக்கு வினைத்திறனானதாக அமையாது. இருப்பினும் அடிப்படை மட்டத்திலான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.” – இவ்வாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
“காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு 2017.05.02 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்துக்கமைய துறைமுக அதிகார சபைக்கு பொறுப்பாக்கப்பட்டது. இதற்கமைய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் இந்திய வங்கி ஊடாக முன்னெடுக்கப்பட்டதுடன், 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆலோசனை சேவை ஒப்பந்தத்துக்கு அமைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயலுமான வகையில் அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு மதிப்பீட்டு நிதி 2021 ஆம் ஆண்டு மீளாய்வுடன் 45.27 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 61.5 மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்துக்குரிய கடன் ஒப்பந்தத்துக்கு அமைய 75 சதவீதம் பண்டம் மற்றும் சேவைகள் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் செலவு 2012 ஆம் ஆண்டு மேலதிக மதிப்பீட்டுடன் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த அபிவிருத்திப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசின் நிதி ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதித் தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.
காங்கேசன்துறை துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதி 10 மீற்றர்- 12 மீற்றர் வரை ஆழ பரப்பைக் கொண்டுள்ளதுடன் அந்த ஆழத்தை மேலும் அதிகரிப்பதற்கு அதிக நிதியைச் செலவிட வேண்டும். இந்தத் துறைமுகத்துக்கான எதிர்கால கேள்வி மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளும் போது காங்கேசன்துறை துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றியமைப்பது பொருளாதாரத்துக்கு வினைத்திறனானதாக அமையாது. இருப்பினும் அடிப்படை மட்டத்திலான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.
Leave a comment