Home தாயகச் செய்திகள் தமிழ் மக்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறவில்லை – சபையில் சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் மக்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறவில்லை – சபையில் சாணக்கியன் எம்.பி. குற்றச்சாட்டு!

Share
Share

“நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும்  மாகாண சபைத் தேர்தல் தெராடர்பில் அரசு வழங்கிய வாக்குறுதிகள் வெறும் கானல் நீராகியுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்  காலத்தில் ஒரு வருடம்  நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.” – இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப்  பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த ஒரு வருட காலத்தில் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை. திருப்தியடையும் ஒரு தீர்வைக் கூட அரசு முன்வைக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் ஒரு வருடம் நிறைவடையும் போது  ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காகவே இந்த மாதம் முதல் வாரத்தில் வடக்கு மற்றும்  ஏனைய மாகாணங்களில் அவசர அவசரமாக அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவமானப்படக் கூடாது என்பதற்காகவே அவசரமாக ஒருசில அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு வழங்குவதற்கு அரசு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளவில்லை. காணி விடுவிப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அரசு குறிப்பிட்டது. ஆனால், இதுவரையில் அந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதற்கு இந்த அரசு  எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அத்துமீறிய மேய்ச்சல்காரர்கள் எமது மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளார்கள். இந்தப் பிரச்சினைக்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாகத் தீர்வு காணுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றோம்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளை விடுவிப்பதாக வாயால் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், செயலில் ஒன்றுமில்லை. வளவளத்துறை திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதாக சுற்றாடல் துறை அமைச்சர் வடக்குக்கு வந்து குறிப்பிட்டார். மூன்று மாதங்கள் கடந்தும் ஏதும் நடக்கவில்லை.

எமது மக்கள் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இதற்கு இந்த அரசு வழங்கிய பதிலை எம்மால் ஏற்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மைதானக் காணியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. செம்மணி விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவதாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் குறிப்பிட்டார்கள். தற்போது 2026 என்று குறிப்பிடுகின்றார்கள்.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்குரிய சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம், புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி எவ்வித பேச்சும் நடைபெறவில்லை. எமது மக்கள் கடந்த  காட்டிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த  கால ஆட்சியாளர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியாது என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்கள். ஆனால், நீங்கள் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளீர்கள். இதனைத் தொடர்ச்சியாக ஏற்க முடியாது.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை...

மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் முருங்கனில் ஒருவர் மரணம்!

மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்....