எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பாதிப்புகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்த முடியாது என குறித்த கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த சிங்கப்பூர் கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சமுவேல் யோஸ்கோவிட்ஸ், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை செலுத்தினால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.
இழப்பீட்டை செலுத்துவதால், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் பரந்த அளவிலான தாக்கங்கள் ஏற்படக்கூடும் என தாம் நம்புவதாகவும் எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடல் எல்லைக்குள் கொழும்பை அண்மித்த பகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதம் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட இரசாயன கழிவினால் நாட்டின் கடற்சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
கப்பலில் கொண்டுவரப்பட்ட 81 கொள்கலன்களில் நைட்ரிக் அமிலம் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஈயம் மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டன.
இலங்கை கடல் எல்லைக்குள் வருவதற்கு முன்பு கசிந்த நைட்ரிக் அமிலத்தை இறக்குவதற்கு கத்தார் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்க மறுத்தன.
இந்த நிலையில் அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைய குறித்த கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் தனது பயணத்தை முன்னெடுத்தது.
விபத்தின் போது, கப்பலிலிருந்து டன் கணக்கில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையில் 80 கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரையை மூழ்கடித்தன.
இதனால் பல மாதங்களுக்குக் குறித்த கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த கப்பல் நிறுவனம் 01 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை இலங்கைக்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு வருடத்திற்குள் குறித்த தொகையை செலுத்த வேண்டும் எனவும், அதில் முதலாவது தவணையாக 250 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Leave a comment