அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணம் இது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சாதாரண மக்களும் ஜனாதிபதியாக முடியும். அப்படிதான் ரணசிங்க பிரேமதாஸ, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாகத் தெரிவாகினர்.
எமது நாட்டில் நீண்ட காலமாகப் பல கட்சி ஆட்சி முறை உள்ளது. அதனை ஒழிக்க இந்த அரசு முற்படுகின்றது. அதற்கு இடமளிக்க முடியாது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தருணம் இது. என்னைக் கைது செய்வதன் ஊடாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தப் பார்க்கின்றனர். இதற்கு நாம் அச்சப்படக் கூடாது.
நான் ஜனாதிபதிப் பதவியில் இருந்த காலத்தில் எனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இலண்டனுக்குத் தனிப்பட்ட விஜயம் செய்தமைக்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக என் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால்,நான் இலண்டன் சென்றது உத்தியோகபூர்வ பயணம் ஆகும். இதனை நான் நிரூபித்தும் அவர்கள் என்னைக் கைது செய்தனர்.
அழைப்பிதழைக் காண்பித்தும் அவர்கள் என்னை விளக்கமறியலில் வைத்தனர்.
ஆனால், எனக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களும் ஒன்றிணைந்தனர். எனக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதலில் ஆரம்பித்தது நாங்கள் தான்.
ஆனால், போலிக் குற்றச்சாட்டுக்களின் கீழ் மோசடியான முறையில் அரசியல் தவைவர்களைக் கைது செய்ய நாங்கள் விடமாட்டோம். அதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.
நாங்கள் பயப்படவில்லை . நாங்கள் பயந்து ஒதுங்குவோம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
மோசடியான முறையில் அரசியல் தவைவர்களைக் கைது செய்ய முயன்றால் நாங்கள் ஒன்றிணைந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம்.
எந்தவொரு சவால்களுக்கும் முகம் கொடுக்க நாங்கள் தயார்.” – என்றார்.
Leave a comment