யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில், ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து, கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு இளைஞர்கள் குழுவினர் மது விருந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதன் போது, மோட்டார் சைக்கிள் வீதியில் செல்வோரை வாள்களை வீசி அச்சுறுத்தியவாறு பயணித்த வன்முறை கும்பல், விருந்தினர் விடுதிக்குள் சென்று, அங்கு மது விருந்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை, தாக்குதலாளிகள் பொலிஸார் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதன் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளதுடன், தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leave a comment