முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரைப் பிணையில் விடுவிக்குமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அத்துரலிய ரத்தன தேரர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்துரலிய ரத்தன தேரரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் வேதனிகம விலமதிஸ்ஸ தேரரைக் கடத்திச் சென்று மிரட்டிய சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரைக் கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அத்துரலிய ரத்தன தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆஜராகியதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment