யாழ். தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் 24 பேர் தொடர்பான வழக்கு தீர்ப்புக்காக இன்று வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தவணையிடப்பட்ட போதிலும் நீதிவான் வருகை தராத காரணத்தால் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி தீர்ப்புக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி அம்பிகா சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பின் பின் காணாமல்போன 24 நபர்களில் மூன்று பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சில வருடங்களாக மூன்று வழக்குகளும் விசாரணைக்காக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று தற்போது தீர்ப்புக்காகத் தவணையிடப்பட்டுள்ளது.
இன்று நீதிவான் வருகை தராத காரணத்தால் மேற்படி வழக்கு தீர்ப்புக்காக எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.” – என்றார்.
Leave a comment