மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும், தாமே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மைப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்படி, மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னர் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் எனக் குறித்த பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவுவதாகக் கூறப்படும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது கருத்துரைத்த சஜித் பிரேமதாஸ பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் அது தம்முடைய எதிர்க்கட்சி கூட்டணியுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும், தாமே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப் போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment