“குற்றச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்ட ஏற்பாடுகள் மிகவும் அவசியம்.” – இவ்வாறு புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தலைமறைவாகி இருந்த 11 குற்றவாளிகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களைத் தடுக்கும், குற்றக் குழுக்களை ஒடுக்கும் வேலைத்திட்டத்தைத் தற்போதுள்ள சாதாரண சட்டத்தின் பிரகாரம் முழுமையாக முன்னெடுக்க முடியாது. இது பற்றி ஜனாதிபதி, நீதி அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். இதற்கமைய தேவையான புதிய சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைக்கப் பெறுகின்றது. சர்வதேசத்தின் நன்மதிப்பை இலங்கை பொலிஸ் பெற்றுள்ளது.
அதேவேளை, நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தடுப்பதற்குரிய வேலைத்திட்டம் செயற்படுகின்றது. சட்டத்தில் சிற்சில குறைபாடுகள் உள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் நாம் தற்போது கைவைப்பதில்லை.
இவ்வாறு சட்ட ரீதியாக உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும். போதைப்பொருள் மாபியாக்களின் பிடிக்குள் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்
Leave a comment