கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக உள்ளதாக வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வலி. தெற்கு பிரதேச சபையின் அமர்வு நேற்று புதன்கிழமை அவரின் தலைமையில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ‘வலி. தெற்கு பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள கந்தரோடையில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தை தென்னிலங்கை மக்கள் தொடர்ச்சியாக பார்வையிட வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தப்பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக மக்களிடமிருந்து நிதி வசூலிக்கும் நோக்கில் அந்த இடத்தில் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளார்.
‘அங்கு அமைக்கப்படும் சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக முதல் கட்டமாக எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் அங்கு
அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம், சைவ மதம் இருந்தமைக்கான வரலாறு களைமறைத்து கருத்துகள் பரப்பப்படுகின்றன.
இது தவறான செயல். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ‘அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சி செய்கிறது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.
இந்தஆய்வில், 3 அடி உயரமான கிருஷ்ணர் சிலை ஒன்று கிடைத்துள்ளது. அதனை மூடிமறைத்து அந்தப் பகுதியில் ஆய்வை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில்
மேற்கொள்கின்றனர் என்று அண்மையில் அறிந்தேன்.
இது பௌத்தமயமாக்கல் திட்டம். தையிட்டி போன்று கந்தரோடையிலும் பௌத்த மயமாக்கலை செய்வதற்கு அரசாங்கம் நினைக்கிறது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் நாம் தயாராக உள்ளோம் – என்றார்.
Leave a comment