13 ஐ வேண்டாம் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் 13ஐ விட அதிகாரம் உள்ள ஒரு அரசமைப்பைத் தமிழ் மக்களுக்குக் கொண்டு வருவோம் என மக்களுக்கு ஆணை வழங்க முடியுமா என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் கேள்வி எழுப்பினார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தந்தை செல்வா நினைவரங்கில் இடம்பெற்ற ரெலோ அமைப்பின் வீரர்கள் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கின்ற தமிழ்க் கட்சிகளிடத்து நிலையான ஒரு கூட்டு இல்லாமை மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் சிலர் 13 ஐ வேண்டாம் எனக் கூறுகின்றார்கள்.
நான் அரசியல் கட்சி சார்ந்தவன் அல்லன். நான் ஒரு ஊடகவியலாளர். பதின்மூன்றை வேண்டாம் எனக் கூறுபவர்கள் பதின்மூன்றில் உள்ள அதிகாரங்களைவிடக் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்போம் என மக்களுக்கு உறுதி வழங்க முடியுமா?.
என்னைப் பொறுத்தவரை பதின்மூன்றை நிராகரிப்பவர்களால் மக்கள் முன் உறுதி வழங்க முடியாது.
பதின்மூன்றாவது திருத்தம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் அமைப்பில் இருக்கின்ற விடயம். இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இன்றும் அரசமைப்பில் 13 இருக்கின்றது. அல்லாவிட்டால் வடக்கு – கிழக்கு பிரிந்தது போன்று தூக்கி எறியப்பட்டிருக்கும்.
13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் சிலவற்றை சாதிக்கக்கூடிய அல்லது கையாளக்கூடிய அதிகாரங்கள் அதில் இருக்கின்றன.
மாகாண சபை ஆட்சி அதிகாரம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இருந்தபோது அதைச் சரிவரப் பயன்படுத்தினோமா? இல்லை. தரகு அரசியல் செய்தோம்.
மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரம் காலத்துக்கு காலம் பறிக்கப்பட்டு வந்தது உண்மை. இருந்தாலும் இருக்கின்ற அதிகாரங்களை ஏன் நாங்கள் பயன்படுத்தவில்லை என்பதற்கு நாங்களே பொறுப்பு.
சமஷ்டி தொடர்பில் பேசுகின்றோம். தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்று சபைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிராகரிக்கிறோம் என யாராவது கூற முடியுமா?
ஆகவே 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு அதைவிட அதிகாரம் உள்ள திருத்தத்தை கொண்டுவர முடியுமா என சிந்திப்பதே நடைமுறைச் சாத்திய விடயம்.” – என்றார்.
Leave a comment