மட்டக்களப்பு, காத்தான்குடியில் 11 வருடங்களாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த – 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட – பிரபல பெண் போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து காத்தான்குடி 6 ஆம் பிரிவு ஜின்னா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றை கடந்த 22 ஆம் திகதி பொலிஸெ முற்றுகையிட்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரியை 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர்
அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையை அடுத்து அவர் வழங்கிய தகவலுக்கு அமைய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து அவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் வியாபாரி கடந்த 11 வருடங்களாகப் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும், இதுவரை அவர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்தப் பெண் வியாபாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாள்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்று, அவரைப் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment