“பொறுப்புக்கூறல் விசாரணைகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். இறுதிப் போரில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் எமது அரசு தடையாக இருக்காது.”
– இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உண்மையில் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால்தான் இலங்கை மீது ஜெனிவாக் குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளன.
கடந்த ஆட்சியாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, வெறும் அறிக்கைகளைச் சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.
ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையில் இருந்து செல்லும் தரப்பு அறிக்கையைச் சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர். மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகின்றது. இதுவரை காலமும் இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது.
சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்றைக் கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும். ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாகச் செயற்படுவது என்பது தொடர்பில் எமது அரசு ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது. உதாரணமாக செம்மணி மனித புதைகுழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளைப் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை.
மறுபுறம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விசாரணைக்கும் அரசு தடையாக இருக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம். சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே, யாரையும் பாதுகாப்பதற்காக எமது அரசு கடமைப்பட்டில்லை.
அது மாத்திரமன்றி ஜெனிவாக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே, ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும். பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக இந்த அரசு அவர்களுக்கு உரியது என்பதைப் பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். ஆனால், இதுவரை காலமும் அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனிதப் புதைகுழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசால் செயற்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.
இந்த விசாரணைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளைத் தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், விசாரணைப் பொறிமுறைக்குப் பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும். மாறாக அந்தப் பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம்.
எனவே, ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளைச் சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவும் தயராகவே உள்ளோம். ஆனால், விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். இறுதிப் போரில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி மாத்திரமல்ல முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் எமது அரசு தடையாக இருக்காது.” – என்றார்.
Leave a comment