Home தாயகச் செய்திகள் வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? – சபையில் சிறீதரன் எம்.பி. கேள்வி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? – சபையில் சிறீதரன் எம்.பி. கேள்வி!

Share
Share

“நாட்டில் போர் முடிவடைந்து  16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தை அண்மித்துள்ள நிலையில்,  வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வின் போது  நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் 13 கிராம அலுவலர் பிரிவுகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்கள், பலாலி இராணுவ முகாம் இராணுவத்தினரின் வருகை மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக 1990.06.15ஆம் திகதி தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்தார்கள்.

இந்த இடப்பெயர்வு நிகழ்ந்து 35 வருடங்கள் கடந்தும், நாட்டில் போர் முடிவடைந்து 16 வருடங்கள் நிரம்பிய பின்னரும் இன்றுவரை மீள்குடியேற்றப்படாத நிலையில் உள்ள அந்த மக்கள், இந்த நாட்டுக்குள்ளேயே இடைத்தங்கல் முகாம்களிலும்,உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிக விஸ்தீரணமுடைய காணிகளைக் கொண்ட மயிலிட்டி, பலாலி, வசாவிளான்,கட்டுவன், குரும்பசிட்டி, குப்பிளான், தையிட்டி, ஊறணி,தோலகட்டி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்தக் காணிகளில் குடியேறும் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே இன்றும் வாழ்கின்றார்கள். ஆட்சி மாற்றங்கள், அரசு மாற்றங்களின் பின்னும் அவர்களது மீள்குடியேற்றம் சாத்தியப்படுத்தப்படாமை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரதும், அவர்களது பிள்ளைகளினதும், அடுத்த தலைமுறையினதும் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.

எனவே, யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள  13 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்தும் கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, இன்று வரை சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாது இந்த நாட்டுக்குள்ளேயே ஏதிலிகளாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் எத்தனை என்பதை அமைச்சர் அறிவாரா?

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், இந்த மக்களுக்குச் சொந்தமான எத்தனை ஏக்கர் காணிகள் இன்றளவும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், குறித்த காணிகள் ஏன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா?

இந்த நாட்டில் போர் முடிவுற்று 16 ஆண்டுகளின் பின்னரும் வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன் என்பதையும், இதனால் சொந்த மண்ணில் குடியேறி வாழ முடியாதவர்களாக அந்த மக்கள் படும் அவலங்கள் எத்தகையவை என்பதையும் அமைச்சரால் இந்தச் சபைக்கு அறிவிக்க முடியுமா?

 திய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தை அண்மித்துள்ள நிலையில், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பாரா? இது விடயமாக, தங்கள் அமைச்சால் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது சாத்தியமாகும் என்பதை இந்தச் சபையில் பகிரங்கமாகத் தெரிவிக்க முடியுமா? அத்தகைய நடவடிக்கைகள் எவையேனும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனின் மேற்குறித்த மீள்குடியேற்ற விடயம் காலதாமதமாவதற்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?” – என்று கேள்விகளை எழுப்பினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை – சபையில் கருணாதிலக!

“பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள்குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது....

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது,...

ஒரு சைக்கிள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி! பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப் பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு சைக்கிளும், 4...