யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் சட்டத்தரணி 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பொம்மைவெளிப் பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அந்தக் காணியின் உறுதி முடிப்பை நிறைவேற்றிய பெண் சட்டத்தரணி இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர் , பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளது.
அதேவேளை, மேற்படி பெண் சட்டத்தரணியின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுகிழமை பொலிஸார் அத்துமீறி நுழைந்து எவ்விதமான நீதிமன்றக் கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டனர் எனவும், பொலிஸாரின் இந்தச் செயல்களைக் கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் நடத்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காணி மோசடி வழக்குகளில் சட்டத்தரணிகள் சிலர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குத் தாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
Leave a comment