மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பெரிய வேதம், பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய எட்டு பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் சம்பவ தினமான நேற்று முன்தினம் காலை தனது வீட்டிலிருந்து பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்றார்.
இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது, நேற்றுக் காலை யானை தாக்கி உயிரிழந்த நிலையில்
சடலமாக மீட்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சம்பவ இடத்துக்குச் சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார மருத்துவமனையில் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Leave a comment