2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதைய
அரசாங்கத்தினால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர்
கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு
பதிலளிக்கும் போதே அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.
2019 முதல் 2024 வரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் சட்ட
மா அதிபர் திணைக்களத்தினால் மொத்தம் 102 வழக்குகள்
மீளப்பெறப்பட்டுள்ளன.
இந்த 102 வழக்குகளில் 65 வழக்குகள் தற்போது அரசாங்கத்தினால் மீண்டும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏனைய வழக்குகளில் 34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யப்போவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 3 வழக்குகள் குறித்து அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.
‘கடந்த அரசாங்கங்களின் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் மீளாய்வு செய்து தாக்கல் செய்வோம் எனத் தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது.
அந்த வாக்குறுதிக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,’ எனப்பிரதமர் மேலும் விளக்கமளித்தார்.
Leave a comment