மாகாண சபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க ‘நாடாளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணை, எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீண்டகாலமாக இழுபறியில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வாக இது கருதப்படுகிறது.
சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, 2026 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஜனவரி 6 – 9 ஆம் திகதி வரையான அமர்வுகளின் நிகழ்ச்சி நிரலும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடற்றொழிலாளர் ஓய்வூதிய மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதம், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரகடனம் தொடர்பான விவாதம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்த விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை சமர்ப்பித்தல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனவரி 7 ஆம் திகதி புதன் கிழமை கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம்
விவாதம் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (203 ஆம் அத்தியாயம்) வெளியிடப்பட்டுள்ள இரண்டு புதிய ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அதனையடுத்து, ஜனவரி 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடை மற்றும் அலுவலக ஊழியர்களின் ஊழியத்தையும், வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment