மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கெதிராக நீதிச்சேவை ஆணைக்குழுவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 23.09.2025 அன்று நீதிச் சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான், நீதவான் ஒருவருக்குரிய கண்ணியமான
நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான சான்றுகள் முற்படுத்தப்பட்டிருந்தமையைத் தொடர்ந்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தினை உடனடியாக நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் கையளித்ததன் அடிப்படையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் 23.09.2025 இலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், நேற்று நீதிச்சேவை ஆணைக்குழுவின் சார்பில் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்துக்கு காலை வேளை பிரசன்னமாகி பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவானின் சமாதான அறை மற்றும் அதில் உள்ள பொருட்களை பொறுப்பேற்று நீதிமன்ற பதிவாளரிடம் கையளித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய மேல் நீதிமன்ற நீதிபதி, புதிய நீதவான் ஒருவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார் என சட்டத்தரணிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருந்தார் – என குறிப்பிட்டார்.
Leave a comment