மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த மின் சக்தி அமைச்சர் தலைமையில் நேற்று பாராளுமன்ற அறையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது மேலும், திட்டத்தை எதிர்க்கும் தரப்புகளுடன் பேச்சு நடத்தி இந்த விடயத்துக்குத் தீர்வு எட்டுவது என்றும் இரு வாரங்களின் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சு ஒன்றை நடத்துவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
மன்னாரில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் மற்றும் இல்மனைட் மண் அகழ்வுக்கும் பெருமளவில் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,
இவை தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,
சிவில் சமூக பிரதிநிதிகள், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல தரப்பினர் பங்கேற்றனர்.
இதன்போது, காற்றாலை மின் திட்டத்தால் மன்னார் மாவட்டத்தில் மனித மற்றும் இயற்கை வாழ்விடங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அத்துடன், திட்டத்தின்
ஆரம்ப பணிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மன்னாரை சேர்ந்த சிவில் அமைப்பினர் எடுத்துரைத்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எட்டுவது என்றும் அதுவரை இந்தத்திட்டத்தை இடைநிறுத்தி வைப்பது
எனவும் மின்சக்தி அமைச்சர் தீர்மானம் எடுத்து அறிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் இரு வாரங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுடன் உரையாடவும் முடிவு எட்டப்பட்டது.
தவிர, காற்றாலை மின் திட்டப் பணிகளுக்காக மன்னார் தீவுக்குள் கொண்டு செல்லப்பட்ட உபகரணங்களை பாதுகாப்பாக பிறிதோர் இடத் தில் வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
Leave a comment