அரியாலை மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தன. இங்கு 240 எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டன. அரியாலை – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியில் இரு அகழ்வாய்வு தளங்களில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இரு கட்டங்களாக 54 நாட்கள் இந்த அகழ்வு பணி நடைபெற்றது. முதல் கட்ட அகழ்வு 9 நாட்களும் 2ஆம் கட்ட அகழ்வு 45 நாட்களும் நீடித்திருந்தன.
இந்த இரு கட்ட அகழ்வுகளிலுமாக 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இதில், 239 எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன. அவை நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன. புதை குழியில் கண்டறியப்பட்ட எலும்புக் கூடுகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் வரையானவர்களின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அத்துடன், இந்தப் புதைகுழியில் குவியல்களாகவும் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், 72 இற்கும் மேற்பட்ட சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டம் இந்த நிலையில், புதைகுழி தொடர்பான வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
செலவின அறிக்கை, இடைக்கால நிபுணர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட அகழ்வு குறித்து தீர்மானிக்கப்படும் என்று அறியவருகிறது.
Leave a comment