மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அது தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது,
அதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் இவ்வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து, வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து, நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார்.
Leave a comment